சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரிலிருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூருக்கு 6,000 மெகாவாட் மின்சாரம் கொண்டு வர 24,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு சட்டீஸ்கரில் இருந்து தமிழ் நாட்டிற்கு 1,843 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5,530 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஈரோடு,திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட எழு மாவட்டங்களில் விவசாய நிலங்களின் மீது மின்கோபுரம் அமைப்பதற்கு தடை கோரி 11 விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மக்கள் தடையில்லா மின்சாரம் பெற ஏதுவாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறித் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
உண்மையிலேயே மின் கதிர்கள் பாய்ந்து பாதிப்புக்குள்ளானவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் கோபுரத்தின் உயரத்தை உயர்த்துமாறு கோரிக்கை மனு அளிக்கலாம் என குறிப்பிட்ட நீதிபதி, தமிழகத்தில் வெறும் 345 கிலோ மீட்டருக்கு மட்டுமே மின் கோபுரங்கள் அமைக்கும் நிலையில், மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்பி அரசு திட்டங்களை முடக்க முயற்சிப்பர்களுக்கு கண்டனத்தைத் தெரிவித்தார்.