சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்எல்ஏ செம்மலை, "பெரிய ட்ரான்ஸ்பார்மர்களில் 500 முதல் 600 மின் இணைப்புகள் கொடுக்கப்படுவதால், மின்தடை ஏற்படும் போது மொத்த நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, பெரிய ட்ரான்ஸ்பார்மர்களுக்குப் பதிலாக ஒரு கம்பத்தில் அமைக்கப்படும் சிறிய வகை ட்ரான்ஸ்பார்மர்களை அமைத்தால் இது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். தற்போது 1912 என்ற இலவசத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து மாவட்ட மின் பொறியாளர் அலுவலகத்திலும் கொண்டு வர வேண்டும்" எனப் பேசினார்.
இதற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதிலளிக்கையில், "சிறிய வகை ட்ரான்ஸ்பார்மர்களைத் தேவையான இடங்களில் அமைத்து வருகிறோம். மின்தடை ஏற்பட்டால் 30 நிமிடங்களில் வேறு வழியில் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆகவே சிறிய வகை ட்ரான்ஸ்பார்மர்கள் நிதிநிலைக்கு ஏற்ப பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1912 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களின் புகார்கள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.