திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ளது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் படை சூழ, துரைமுருகன் வீடு எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் துரைமுருகன் வீட்டிற்குத் தேர்தல் அலுவலர்களுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் துரைமுருகன் வீட்டில் குவிந்தனர். இதனால் அவர் வீட்டைச் சுற்றி பதற்றம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த திமுக வழக்கறிஞர் பரந்தாமன், அலுவலர்களிடம் நீங்கள் யார், எதற்கு வந்துள்ளீர்கள் எனக் கேட்டார். அதற்கு, நாங்கள் தேர்தல் பார்வையாளர்கள். அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து வந்த புகாரால் வந்தோம் என்றுள்ளனர். அதற்கு திமுகவினர், அரக்கோணம் தொகுதியில் வந்த புகாருக்காக எதற்கு வேலூர் தொகுதி வேட்பாளர் வீட்டிற்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியதுடன், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வாக்குவாதமும் செய்தனர்.
பிறகு அதிகாரிகள் நீண்ட நேரம் துரைமுருகன் வீட்டுக்கு வெளியே காத்திருக்கின்றனர். இதனால் பதற்றம் நீடித்தது. இதுகுறித்து திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கூறுகையில், ’அரசியல் உள்நோக்கத்துக்காக அதிகாரிகள் சோதனை நடத்த வந்துள்ளனர். முறையான கடிதம் இருந்தால் சட்டப்படி சோதனை நடத்த நாங்கள் அனுமதிப்போம்’ என்றார்.