டிஜிட்டல் உலகில் அடியெடுத்து வைத்தவுடன் குற்றங்களைக் குறைக்க சிசிடிவி அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. வீடுகளிலும், சிறிய கடைகளிலும் கூட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தங்களது பாதுகாப்பில் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் சென்னை பாடி சீனிவாச நகர் பொதுநல சங்கம் சார்பில் 50 வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அம்பத்தூர் உதவி ஆணையர் கண்ணன் மற்றும் கொரட்டூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் சென்னையில் அதிகரித்துவரும் குற்றங்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகுக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனை மக்கள் பின்பற்றும் விதமாக சென்னை பாடி சீனிவாசன் நகர் பகுதி முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தியுள்ளனர். இதனை தனி அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.