தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து சென்னை மேடவாக்கத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, வாக்கு வங்கி உள்ள கட்சிகள் எங்கள் அணியில் தான் உள்ளது, வாக்கு வங்கிகள் இல்லாத கட்சிகள் தான் திமுக பக்கம் உள்ளது.
திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கின்றனர். திமுக பரப்புரை கூட்டங்களில் ஊர்ப்பகுதிகளில் விசிக கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்று திமுக சொல்லி வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே விசிக கொடிகளை திமுக பரப்புரையில் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதுபற்றி தேர்தல் முடிந்த பிறகு திருமாவளவன் நிச்சயம் பேசுவார்.
ஸ்டாலினும் உதயநிதியும் வாயைத் திறந்தாலே பொய் பேசுகிறார்கள். வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்துவிட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் முன் வைக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரே மேடையில் ஸ்டாலின் அல்லது உதயநிதியுடன் விவாதிக்க தயார்” என கூறியுள்ளார்.