தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நெகிழி கப், நெகிழிப் பை உள்ளிட்ட 14 வகையான நெகிழிப் பொருள்களை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. ஆனால், அரியலூர் மாவட்டம் முழுவதும் நெகிழிப் பொருள்கள் எவ்வித தங்கு தடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
குறிப்பாக மளிகைக் கடைகள், மால்களில் அவற்றை விற்பனை செய்தும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தும் வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இததையடுத்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையருக்கு இவ்விவகாரம் குறித்து தீர்வு காண உத்தரவிட்டார்.
இந்நிலையில், அரியலூரில் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது தலைமையிலான குழுவினர் மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு, பெரம்பலூர் சாலை, சின்னக்கடை வீதி, மார்க்கெட் தெரு, வெள்ளாளத்தெரு உள்ளிட்டப் பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழி கப்புகள் என இரண்டு லட்சம் மதிப்புள்ள நெகிழிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பெரும்பாலான கடைகளுக்கு எவ்வகையான நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவது எனத் தெரியவில்லை.
நகராட்சி அலுவலர்கள் சில கடைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். மேலும், அரசு தடை செய்துள்ள நெகிழிப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும் எச்சரித்தனர்.
இவ்வகையான ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தி, அரியலூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்