கரோனா பரவலால் ஆன்லைனில் பாடங்கள் நடத்திட தமிழ்நாடு அரசு கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதன் காரணமாக தனியார் கல்லூரிகள் ஆன்லைனில் பாடங்கள் நடத்தத் தொடங்கினர். ஆனால் சில அரசு கல்லூரிகளில் மட்டுமே ஆன்லைன் கல்வி முறை இருந்தது.
அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை பொருளாதாரம் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பொருளாதார துறைத் தலைவர் ஜெயக்குமார் முறையாக இணைய வழியில் பாடம் நடத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்தக் கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை பொருளாதாரம் வகுப்பில் 25 மாணவ மாணவிகள் பயிலும் நிலையில், முறையான ஆன்லைன் கல்வி இல்லாததால் அவர்களது நடப்பாண்டு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் செமஸ்டருக்கு பொருளாதாரத்தில் எந்தந்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற நிலையே தெரியாத நிலையில் இன்று (நவ.,5) தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை உள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனைக் கண்டிக்கும் விதமாக செமஸ்டர் தேர்வில் கேள்வியையே பதிலாக எழுதி கல்லூரி முதல்வர் மலர்விழியிடம் மாணவர்கள் கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த செமஸ்டர் தேர்வை மறுபடியும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் படிங்க:பாடப்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத கோரிக்கை: ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவர்கள் போராட்டம்