அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்திலிருந்த கரையான் புற்றை அகற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று அந்த கரையான் புற்றை அகற்றிய போது அதிலிருந்து சிவலிங்கம் மற்றும் நந்தி சிலையும் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இரண்டையும் எடுத்து நீரில் அபிஷேகம் செய்து அதனை தனது நிலத்தின் அருகே வைத்து வழிபட்டார். இதனை அறிந்த சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த மக்களும், சிவனடியார்களும் நேரில் வந்து ஆவுடையப்பன் சிவலிங்கத்தை வழிபட்டுச் செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி நடராஜன் கூறுகையில், எனது தாத்தா அந்த நிலத்தில் ஆவுடையப்பன் கடவுள் இருப்பதாகவும் அதை வணங்கி வழிபட்டு விவசாயம் செய்ய வேண்டும் என கூறுவார். ஆனால் காலப்போக்கில் அது மறைந்து போனது. தற்போது அந்த லிங்கம் கிடைத்துள்ளது என்றார்.