அரியலூர்: தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக்குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது. பொதுக்கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் இந்த பொதுக் கணக்குக்குழு ஆய்வில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக் கணக்குக்குழுவினர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு மருத்துவ மாணவர்கள் பயிலும் ஆய்வகம், பரிசோதனைக் கூடம், வகுப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் தொடர்பான பயிற்சிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும், மருத்துவம் பயிலும் மாணவர்களிடம் மருத்துவப் படிப்பு குறித்து கேட்டறிந்து கல்லூரி வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளிடம் விடுதியில் உள்ள உணவின் தரம் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து அரியலூர் அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை பார்வையிட்டு மாணவர்கள் தங்கும் இடத்தினை ஆய்வு செய்து விடுதியை முறையாக பராமரிக்கவும், விடுதியில் பழம்பெரும் தலைவர்கள் புகைப்படங்களை வைக்கவும், வளாகத்தில் நிழல்தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வளாகத்தை பசுமையாக பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அரியலூர் அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை பார்வையிட்டு சமையல் அறை, பொருட்கள் வைப்பறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் மாணவர்களுக்கு தரமாக உணவினை சமைத்து வழங்கவும், கழிவறைகளை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை பொருட்களான போர்வை, தலையணை உள்ளிட்ட பொருட்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து வாரணவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாயவிலைக் கடையினைப் பார்வையிட்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் அங்குள்ள தானிய ஈட்டுக் கிடங்கினையும் பார்வையிட்டு அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள விளை பொருட்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை பார்வையிட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமோஸைட், கனிமத் தாது, கனிமங்கள், புதைபடிமங்கள் உள்ளிட்ட பல்வேறு தொன்மைக் காலப் பொருட்களை ஆய்வு செய்ததுடன் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த கல்லூரி மாணவிகளிடம் அருங்காட்சியகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் அருங்காட்சியகம் குறித்த காணொலி ஒன்று தயாரிக்கவும் அறிவுறுத்தினர்.
கீழப்பழுவூரில் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இ-சேவை மையத்தினை பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம் அரசின் சார்பில் வழங்கப்பட்ட சுயத் தொழில் கடன்கள் குறித்தும், அதன் பயன்கள் மற்றும் மகளிர் குழுக்கள் செயல்பாடுகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள். பின்னர் கயர்லாபாத் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையினை பார்வையிட்டு ஆலையின் உற்பத்தி திறன், பணியாளர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் ஆலையின் மத்தியக் கட்டுப்பாட்டு அறையினையும் பார்வையிட்டு ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி செலவினம் குறித்து பொதுக் கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் நிதி செலவினங்கள் குறித்தும், மத்திய தணிக்கை துறையின் சார்பில் வழங்கப்பட்ட அறிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது தமிழக சட்டப் பேரவை செயலாளர் முனைவர் சீனிவாசன், சார்பு செயலாளர் பலசீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ஆய்வைத் தொடர்ந்து குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “கடந்த அதிமுக ஆட்சியில் அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால், அரசுக்கு ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சமூக நலத்துறை சார்பில் விலையற்ற பொருட்களைச் சரியாகப் பரிசீலனை செய்யாமல் கொடுத்ததில் ரூ.3 கோடியே 23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த துறையின் செயலாளரை விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்துள்ளோம். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கான பராமரிப்பு செலவு என்று அரசு ஒதுக்கிய நிதி ரூ.21 கோடியே 5 லட்சம் மானியமாக முழுவதும் வழங்கப்படாமல், அரசு கணக்கிற்கு மீண்டும் அனுப்பியுள்ளனர். இது உரிமை நிதியாக வழங்கப்படாமல் திருப்பி அனுப்பியுள்ளதை மாவட்ட நிர்வாகம், கணக்காயர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையில் முத்திரை கட்டணமாகக் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுந்தர் ஸ்கேல் என்ற நிறுவனத்திற்கு, தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ.1 கோடியே 69 லட்சம் அதிகமாகக் கொடுத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்துக் கேட்டபோது மீண்டும் அந்த தொகையை வாங்கி தருவதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். கூட்டுறவு துறையில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் தவறுகள் நடந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.