அரியலூர்-பெரம்பலூர் சாலையில் அரியலூர் தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையமானது தலைநகரான சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் காட்லையன் பாதையில் அமைந்துள்ளது. இவ்வழியாக தொடர்வண்டிகள் செல்லும்போது கேட் மூடப்படும்.
இப்பாதையைக் கடந்து அரியலூர் மாவட்டத்தில் ஒரு அரசு சிமெண்ட் ஆலை உள்ளிட்ட ஏழு சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அவற்றிலிருந்து சிமெண்ட், மூலப்பொருள்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் வந்துசெல்கின்றன. அவ்வாறு செல்லும் பாதையில் அமைந்துள்ள கேட் மூடும்போது வாகனங்கள் வரிசையாக நிற்பதால் வாகன் ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதனையடுத்து மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர். அதனடிப்படையில் மேம்பாலம் கட்டும் பணிகளும் சுமார் 16 கோடியில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் விரைவாக நடந்துமுடிந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது பாலத்தில் சிறிது தூரத்திற்கு மட்டும் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டு, சிமெண்ட் கான்கிரீட் போடாமலுள்ளது.
இதனால் அப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேம்பாலத்தில் ஜல்லிகள் கொண்டிருப்பதால் அவ்வழியாக வரும் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருக்கும் இடத்தில் விரைவாக காங்கிரீட் அமைத்து வாகன ஓட்டிகளைக் காக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.