அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பல வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். எனவே, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் உத்தரவின் பேரில் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஆண்டிமடம் கார்த்திக், மேலநெடுவாய் சிவசுப்ரமணியன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், இவர்களின் கூட்டாளிகளான வரதராஜன், எடிசன், இருதய ராஜ், ஜோசப் ஸ்டீபன் உள்ளிட்ட நான்கு பேரும் ஆண்டிமடம் கிராமத்தில் பல வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, ஆண்டிமடம் காவல்துறையினர் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 55 சவரன் திருட்டு நகைகளைப் பறிமுதல் செய்தனர்.