அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் மனைவி விஜயா என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் கடலை பயிரிட்டுள்ளார். கடந்த 1ஆம் தேதி காலையில் தனது நிலத்தை பார்க்க சென்றபோது பயிர்கள் அனைத்தும் சேதமடைந்திருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயா, அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அலெக்ஸ் அவரது நண்பர் ஸ்ரீராம் ஆகியோர் பயிர்களை சேதப்படுத்தியதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் விஜயா கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் பேசி விஜயாவையும் அவரது கணவர் நீலமேகத்தையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த விஜயா, அவரது கணவர் நீலமேகம் ஆகியோர் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பின்னர் தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் அளித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் கேட்டதற்கு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது மீதும் பொய் வழக்கு தொடுப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், விஜயா தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னை தாக்கியவர்கள் மீது தளவாய் காவல் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தார்.