அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மேலூர், ஜெயங்கொண்டம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களிலிருந்து விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கருக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை குறைந்த இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இந்த இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதற்காக ஜெயங்கொண்டத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்ச மரங்களை சேர்த்து 13 லட்சம் வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுப்பு நிலக்காி திட்டத்துக்காக நிலம் கொடுத்த மேலூர் உள்ளிட்ட 13 கிராம மக்களுக்கு என தனித்தனியே கருத்து கேட்பு கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு அந்த அந்த கிராம சந்தை மதிப்பை கணக்கில் கொண்டு இரண்டு மடங்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மேலூா் மக்களுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தங்களுக்கு தனி நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வழங்க வேண்டும் எனவும், இல்லை என்றால் உடனே தங்களுடைய பட்டாவை திரும்ப வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, மேலூா் கிராம மக்கள் மட்டும் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.