நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதிதாய் தேர்தல் களம் காணும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நேற்று தனது தேர்தல் பரப்புரைக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் கேட்டுவிட்டு வாக்களியுங்கள் என்றும், குறிப்பாக அனிதாவின் குடும்பத்தாரிடம் யாருக்க வாக்களிக்க வேண்டும் என கேளுங்கள்” என கமல் ஆக்ரோஷமாக பேசியிருப்பார்.
இந்நிலையில், அனிதாவின் குடும்பத்தார் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள அவரின் சகோதரரும், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான மணிரத்னத்திடம் பேசினோம்.
அப்போது அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளின் மீது இருந்த கோபத்தை கமல் வெளிப்படுத்தியிருப்பதாக உணர்கிறேன். நானும் கமலின் ரசிகர் தான்.
ஆனால், கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது அதனை மாநில பட்டியலுக்கு மாற்றினால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். அதிமுக - பாஜக கூட்டணியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், அவர்களின் தேர்தல் அறிக்கையில் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை.
ஆகவே, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற அனிதாவின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்பதால் அதை உறுதியாக தெரிவிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க இருக்கிறோம். நான் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளரான திருமாவளவனுக்கு வாக்களிப்பேன். அவர் வெற்றி பெற்றால் நீட் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதேபோல், தமிழக மக்களும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை, அது விற்பனைக்கு கிடையாது” என்றார்.