அரியலூர்: அரியலூர் மாவட்டம், சோழமாதேவி கிராமத்தில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குடந்தை என். இராமலிங்கம் சிலை திறப்பு விழா இன்று (டிச.12) நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறுகையில், "ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவு ஆகியவையால், பிரிவினைவாதம், பயங்கரவாதம் மட்டுமே மக்களுக்குக் கிடைத்துள்ளதாகப் பிரதமர் மோடி கூறிய கருத்து முற்றிலும் தவறானது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கியது சரியே.
அந்த சூழலில் காஷ்மீர் என்ற மாநிலம் இந்தியாவோடு இருக்க வேண்டுமென்று சொன்னால், அந்த காரியத்தைச் செய்ததுதான் சரி. நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்யக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று தான் செல்லியிருக்கிறதே தவிர, அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தது தவறு என்று சொல்லவில்லை. மோடி அனைத்தையும் மறைத்துப் பேசுகிறார்.
காஷ்மீரின் இக்கட்டான சூழலில் இந்தியா அந்த மாநிலத்திற்குப் பாதுகாப்பு வழங்கி, உறுதுணையான நின்றது. அப்படிப் பாதுகாக்கும் போது காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இருந்தார்கள். அதுதான் மிக முக்கியம். 99 சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய காஷ்மீர், இந்துக்கள் இருக்கும் இந்தியாவை நம்பி வந்ததற்குக் காரணம், மகாத்மா காந்தியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம். மோடி மட்டுமே இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கியதைத் தவறு என்று சொல்கிறார்.
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை நாம் அறிவியல் பூர்வமாகத் தான் பார்க்க வேண்டும். இது சாதாரண மழை வெள்ளச் சேதம் அல்ல. இந்த சேதம் என்பது இயற்கை பேரிடர். ஒரு மிகப்பெரிய புயல் 17 மணி நேரம் சென்னைக்கு மேல் சுற்றி வந்தது. அது எந்த பக்கமும் நகராமல் சென்னையை மட்டுமே மையமாக வைத்துப் பெய்துள்ளது. ஒரே இடத்தில் 17 மணி நேரம் மழை பெய்தால், எந்த நகரம் தாங்கும். எனவே இது இயற்கை பேரிடர், மனிதத் தவறல்ல. புயல் மீட்புப் பணிகளை திமுக அரசு சிறப்பாகச் செய்துள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனார்ஜியின் கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்திராவை பதவி நீக்கம் செய்தது மிகப்பெரிய ஜனநாயக விரோத செயல். தற்போது, மோடியைப் பற்றிப் பேசினால் கூட இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதானிக்கு எதிராகப் பேசினால் வெளியே அனுப்பிவிடுகிறார்கள். அப்படியானால், நாடாளுமன்றத்தை மோடி நடத்துகிறாரா? அல்லது அதானி நடத்துகிறாரா?
அதானி அலுவலகத்தில் எவ்வளவு முறைகேடு நடந்திருக்கிறது என்றும் சட்டத்திற்குப் புறம்பாக எவ்வளவு கடன் பெற்றிருக்கிறார்கள் உள்ளிட்டவை அனைத்தும் குறித்து, பலரிடமும் கேட்டறிந்து தான் மொய்த்திரா அதனை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். ஆனால், அவர் காசு வாங்கிக்கொண்டு பேசுவதாக மோடி கூறுகிறார். அப்படியானால், நாடாளுமன்றத்தில் பேசும் அனைவருமே இப்படித்தான் காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார்களா? உங்கள் மீது குற்றம் சாட்டினால் இப்படித்தான் செய்வீர்களா" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை..!