அரியலூர் மாவட்டம் கைகாட்டியில் தனியார் நிறுவனம் சார்பில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இப்பள்ளி வளாகத்தில் 'ஹானஸ்ட் ஷாப்' திறக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்குத் தேவையான பென்சில், ரப்பர், பேனா உள்ளிட்ட பொருட்களும், பிஸ்கட், கடலை மிட்டாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், தேவையுள்ள மாணவர்கள் இந்தக் கடைக்குச் சென்று பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான தொகையை அங்குள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்தக் கடையில் பணியாளர்களோ, கேமராவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், "இதன் முக்கிய நோக்கமே மாணவர்களுக்கு நேர்மை மற்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். மாணவர்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வெளியில் உள்ள கடைகளில் வாங்காமல், பள்ளி வளாகத்தில் உள்ள ஹானஸ்ட் ஷாப்பில் வாங்குகின்றனர். மாணவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துவர மறந்துவிட்டால்கூட இங்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் இது தங்களது நேர்மையை வளர்த்துக்கொள்ள உதவும்" என்கின்றனர்.
இதையும் படிங்க: ‘1330 திருக்குறளையும் எழுதிட்டு வீட்டுக்கு போங்க!’ - போலீஸ் கொடுத்த வித்தியாச தண்டனை