அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோயில். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திருமணம் உள்ளிட்ட வீட்டுச் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
இன்று நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்த அருண் ஸ்டாலின் - திவ்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர், சிலர் அந்த கோயில் வாயிலில் பத்துக்கும் மேற்பட்ட பூட்டுகளைப் போட்டுப் பூட்டி வைத்திருந்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி: பயிர்களின் நோய் தாக்குதல் குறித்து உடனடி நடவடிக்கை!
இதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு வந்த மணமக்களின் உறவினர்கள் கோயிலில் பூட்டுப் போட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர், காவல் துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி கோயிலில் பூட்டைத் திறந்து விட்டனர்.
அதைத்தொடர்ந்து வழக்கம்போல திருமணம் நடைபெற்றது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, தற்போது காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.