அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த விசுவநாதன் என்பவரது மகன் விக்னேஷ்(19). பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துள்ள விக்னேஷ், நீட் தேர்வுக்காக தயார்ப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், செப்.13ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மன உளைச்சலில் இருந்த மாணவன் இன்று (செப்டம்பர் 9) தனது வீட்டருகேவுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், உறவினர்கள் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்ப முடியாது என, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வீட்டில் வைத்திருந்த ரூ.3.75 லட்சம் மதிப்பு வைர நகை மாயம் - பெண் புகார்