அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டிக்கு, சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து கடலை மற்றும் பயிறு வகைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து கடலையை எடைபோட்டு வாங்கும்போது அதிக அளவில் கடலையை சிதற விடுவதோடு, எடை போடுவதிலும் குளறுபடி ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலை போன்றவை எடை போடும்போது 80 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு இரண்டு கிலோ அளவுக்கு குறைத்து எடை போடுவதாகக் கூறி கமிட்டி முன்பாக உள்ள சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ராஜ்மோகன், துணை காவல் ஆய்வாளர் வசந்த் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.