அரியலூர்: இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட அளவில் 5 முதல் 8, 9 முதல் 12 மற்றும் 13 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) குரலிசை மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பரதநாட்டியம் (செவ்வியல் கலை) - பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள், நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) - தமிழ்நாட்டின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்.
குரலிசைப் போட்டி - கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்க வாத்தியக் கருவிகளை பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழுப்பாடல்கள் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை. அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை பாடலாம். ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.
ஓவியப் போட்டி - 40x30 சென்டி மீட்டர் அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான்ஸ், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள், போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்கின்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றிதழ்களுடன், அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) அன்று காலை 9 மணிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் 'சிறுவாணி இலக்கிய திருவிழா' நாளை தொடங்குகிறது!