தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை, ஸ்டேட் பேங்க் காலனி, கோல்டன் சிட்டி, தெய்வேந்திரபுரம், வடுகபட்டி, அழகர்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலர், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த ஜோதி(42), ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த சண்முகம்(28) ஆகிய இருவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு டெங்குப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை டெங்கு காய்ச்சல் தடுப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுஜாதாவிடமிருந்து கற்றதும், பெற்றதும், ரசித்ததும்...