அரியலூர்: இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (பிப்.11) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இக்கூட்டங்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் நடத்துவார்கள். கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டங்களில் பொதுமக்கள் தங்கள் நியாய விலைக்கடைகள் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.
மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்துப் பயன்பெறலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.