அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 41), பழனிச்சாமியின் மனைவி லதா (35) இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை அருகே உள்ள தரிசு நிலத்தில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் மாலை 6 மணி அளவில் ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தனர். அப்போது அரியலூர் - தஞ்சாவூர் சாலையில் சாத்தமங்கலம் அருகே ஆடுகளை ஓட்டி வந்தபோது, அந்த வழியாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லதா, முருகேசன் மற்றும் ஆடுகள் மீது மோதியது.
இதில் முருகேசன், லதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். மேலும் 15 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. விபத்து ஏற்படுத்திய கார் சாலையோரம் இருந்த வயலில் புகுந்து நின்றது. விபத்து நடந்ததும் டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடி விட்டார்.
இதனை அறிந்த கீழப்பழுவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் உயிரிழந்த லதா, முருகேசனின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்த ஆடுகளை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அறிந்ததும், லதா, முருகேசனின் உறவினர்கள் மற்றும் சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் திரண்டு அரியலூர் - தஞ்சாவூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ' உயிரிழந்த லதா, முருகேசனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதனை அறிந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமணி, ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன்தாஸ், அரியலூர் போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன், அரியலூர் வட்டாட்சியர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் நிவாரண கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அரியலூர்- தஞ்சாவூர் சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க: பள்ளி அருகே துரித உணவகத்துக்கு தடை?