அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்திலுள்ள முதல் கடையில் டீ கடை உள்ளது.
இந்த டீக்கடை எப்பொழுதும் பயணிகள் நிற்கும் இடமாக பரபரப்பாக காணப்படும். இந்தக் கடையில் மாஸ்டராக பணிபுரிபவர் கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த குருநாதன். இவர் இன்று வழக்கம்போல் கடையின் உள்ளே வடை, பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்ட் காரைகள் பொலபொலவென பெயர்ந்து விழுந்தன. இதில் காரைகள் எண்ணெய் சட்டியில் விழுந்ததில், சூடான எண்ணெய் நான்கு திசைகளில் தெறித்து குருநாதன் மீதும் விழுந்தது. மேலும் மேலே இருந்து சிமெண்ட் காரைகள் விழுந்தன.
இதில் எண்ணெய் பட்டதால் ஏற்பட்ட காயங்களும் சிமெண்ட் காரை விழுந்ததில் தலையில் ஏற்பட்ட பலத்த காயமும் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேல் ஆகின்றது. சில வருடங்களுக்கு முன்பாக இதே கடையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்துவிழுந்தன. அப்போது யாரும் உள்ளே இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து கடைகளிலும் சேதமடைந்த பகுதிகளை கண்காணித்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.