அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லாத்தூரைச் சேர்ந்தவர் பழனிசாமி(62). துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், டிசம்பர் ஆறாம் தேதியன்று ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ஐந்தாயிரம் ரூபாய் பணம் எடுத்துவிட்டு ரசீதுக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது, பின்னால் இருந்த பெண், தான் பணம் எடுக்கப்போவதாகக் கூறி பழனிசாமையை நகரச் சொல்லி, ஏடிஎம் இயந்திரத்திலிருந்து அவரது ஏடிஎம் கார்டை எடுத்துக் கொடுப்பதுபோல, தான் கொண்டுவந்த போலி ஏடிஎம் கார்டை நூதன முறையில் அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து பழனிசாமியின் தொலைபேசி எண்ணிற்குப் பணம் எடுத்தாதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்ட பழனிசாமி அதிர்ந்துபோனார். இது குறித்து வங்கியில் அவர் புகார் கொடுத்ததையடுத்து அவரது வங்கிக் கணக்கை முடக்கினர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்தப் பெண்ணைத் தேடும் வேட்டையில் களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில், ஏடிஎம் கார்டை திருடிச் சென்ற பெண், அப்பகுதியிலுள்ள நகைக் கடையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு நகை வாங்கியதும் ஏடிஎம் மையத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, நகைக் கடையின் கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்த காவல் துறையினர், அப்பெண் நகைக் கடையில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நகை வாங்கும் காட்சி பதிவாகியிருந்தது. இந்தக் காட்சியை வைத்து காவல் துறையினர் அப்பெண்ணைத் தேடி வருகின்றனர்.
ஏடிஎம் கார்டினை தெரியாவதர்களிடம் கொடுத்து பணம் எடுத்துத்தரக் கூறுவது, ஏடிஎம் கார்டில் ரகசிய எண்ணை எழுதி வைப்பது போன்ற செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் கற்றுக்கொண்டு ஏடிஎம்மில் திருட முயன்றவர் கைது