அரியலூர், பெரியார் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், உடையார் பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிவந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மருந்து வாங்கத் தனது பேத்தியுடன் அரியலூர் சின்ன கடைத்தெருவில் உள்ள முருகன் மருந்தகத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது, மருந்து வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு பேத்தியை ஏற்ற முயன்றார். அந்த நேரத்தில், பின்னால் வேகமாக வந்த மினி லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அந்த முதியவர் படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக, அவரின் பேத்தி நூலிழையில் உயிர் தப்பினார்.
இதையடுத்து, விபத்துக்குள்ளான முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுய நினைவை இழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், சிறுமி நூலிழையில் தப்பிய காட்சி நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது. மேலும், தன் கண்முன்னே தாத்தா விபத்துக்குள்ளான சம்பவத்தை பார்த்த அந்தச் சிறுமி கதறி அழும் காட்சி காண்போரைக் கண்கலங்கவைக்கிறது.