அரியலூர்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் கல்வி மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தில் கல்வி மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருது மற்றும் பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
2021-22ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களில் சிறந்த 30 மாணவ, மாணவியர்களை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து, அம்மாணவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும், பாராட்டுச் சான்றிதழ் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 வீதம் 15 மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.20,000 வீதம் 15 மாணவர்களுக்கும் என மொத்த ரூ.4,50,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உங்க வீட்டில் கன்னுக்குட்டி இருக்கா? - கட்டாயம் இதைப் படிங்க!