அரியலூர்: திருவள்ளூர் மாவட்டம் கூவம் ஆறு அருகே கூவம் புது காலனியைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி ஜமுனா என்கிற சரிதா. சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனோகரன் மற்றும் ஜமுனா என்கிற சரிதா ஆகியோர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 28.03.2014 அன்று சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஜமுனா என்கிற சரிதாவுக்கு குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்த கையோடு மருத்துவமனையில் தற்காலிக கருத்தடை சாதனமான 'காப்பர் டி' ஜமுனாவுக்கு பொருத்தப்பட்டது. அந்த காப்பர் டி பொருத்தப்பட்டதிலிருந்து, ஜமுனாவுக்கு வயிற்று வலி, முறையற்ற மாதவிலக்கு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
சிகிச்சைகள் செய்தும் வலி தொடர்ந்து இருந்ததால் 2016 ஆம் ஆண்டு முழு உடல் பரிசோதனை செய்த போது 'காப்பர் டி' சரியான முறையில் பொருத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் காட்டியுள்ளனர். அப்போது தற்காலிக காப்பர் டியை அகற்ற வேண்டும் என்றால் நிரந்தரமாகக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஆகையால் அங்கேயே நிரந்தர கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் உடல் நலம் சரியாகவில்லை. ஆகையால் இது குறித்து காஞ்சிபுரத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் காட்டிய போது காப்பர் டி முழுமையாக அகற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுக் காப்பர் டி அகற்றப்பட்டது. இதில் காப்பர் டியை முறையாகப் பொருத்தாத மகப்பேறு மருத்துவமனை ரூ.3 லட்சம், பேரம்பாக்கம் அரசு ஆரம்பச் சுகாதார மையம் ரூ.15 லட்சம் என இழப்பீடு தர வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தனர்.
இந்த மனுவுக்கு அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நுகர்வோர் அல்ல. சம்பந்தப்பட்ட நபருக்கு எட்டு வருடங்களாகக் குடல் வால் நோய் பிரச்னை இருந்தது. அவருக்கு குழந்தை பிறந்ததே அறுவை சிகிச்சை வாயிலாகத்தான். தங்களுக்கும் விண்ணப்பதாரருக்கும் நுகர்வோர் என்ற உறவு இல்லை என்பதால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கானது சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலிருந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை கட்டணம் இல்லாமல் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. அதேநேரம் குறிப்பிட்ட சில சேவைகளுக்குக் கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் ஆரம்பச் சுகாதார மையங்களில் எவ்வித தொகையும் பெறப்படுவது இல்லை. ஆரம்பச் சுகாதார மையங்களில் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவ சேவை வழங்கப்படுவது இல்லை. இதை மனுதாரர் நிரூபிக்கவும் இல்லை. எனவே மனுதாரரை நுகர்வோர் என வரையறுக்க இயலாது. அத்தனை கோரிக்கைகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மோடி ஆவணப்படமே வருமான வரி சோதனைக்கு காரணம்: கி.வீரமணி ஆவேசம்