அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிச. 22) தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘மொழி என்பது நாம் பேச நினைப்பதை சரியான முறையில் எடுத்து செல்லும் ஒரு ஊடகமாகும். எல்லோருக்கும் முன்னோடியான ஆதி மொழியாக தமிழ் மொழி உள்ளது.
நமது தாய்மொழியாம் தமிழ் மொழி பல்வேறு சிறப்புகளை ஒருங்கே பெற்றுள்ளது. தமிழ் மொழியில் பிற மொழி வார்த்தைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் மேற்பட்ட பொருள்படும்படி அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக பயன்படுத்துவதற்கு 1956ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் இடத்தில் இருப்பதால் பொதுமக்களின் உணர்வுகளை தெரிந்து உதவி செய்யும் வகையில் தமிழ் ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிற மொழிகளை, வேலைக்காக கற்பதில் தவறில்லை. ஆனால், தாய்மொழியினை அனைவரும் தவறாது கற்க வேண்டும் என்றார்.
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) சித்ரா, மேனாள் தமிழ் வளர்ச்சித் துறைத் துணை இயக்குநர் சிவசாமி, திருச்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மணிகண்டன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மணமலர்ச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை: விமான கட்டணம் உயர்வு