டோக்கியோ: 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பதக்க மேடை ஏறியிருக்கும் இந்திய ஹாக்கி அணி, இந்தியாவிற்கு ஹாக்கி மீதான நம்பிக்கையை மீட்டுத்தந்துள்ளது. ஜெர்மனி அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
முன்களப் பணியாளர்களுக்கு சமர்பணம்
இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறிய அவர், "மிகவும் அற்புதமான இந்தத் தருணத்தில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் இந்தப் பதக்கத்திற்கு கடினமாக உழைத்துள்ளோம்.
கரோனா காலம் எங்களுக்கும் கடினமானதாகவே இருந்தது. பெங்களூருவில் பயிற்சி பெற்று வந்த சமயத்தில் எங்களில் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இவ்வளவு கடினமான காலத்தை எதிர்கொண்டு, மக்களின் உயிரைக் காத்துவரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் இந்த வெண்கலப் பதக்கத்தை சமர்பிக்கிறாம்" என்றார்.
உயிரை கொடுத்து வென்றுள்ளோம்
இன்றைய போட்டி குறித்து அவர் கூறுகையில்," இறுதி ஆறு வினாடிகளில் ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. உயிரைக் கொடுத்து அந்த பெனால்டியை தடுக்க வேண்டும் என நினைத்தோம், தடுத்துவிட்டோம்.
நீண்ட காலத்திற்கு பிறகு ஹாக்கியில் பதக்கம் வென்றுள்ளோம். இப்போது எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. ஒலிம்பிக் தொடரிலேயே பதக்கம் வென்று இருக்கிறோம் எனும்போது எந்த தொடரில் வேண்டுமானாலும் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
நாங்கள் ஆட்டத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தோம். தங்கம் வெல்லாதது வருத்தம்தான் என்றாலும், வெண்கலத்தை பெற்றிருக்கிறோம். ஹாக்கி ரசிகர்களுக்கு இதுபொன்னான தருணம். இது வெறும் ஆரம்பம்தான், வெண்கலத்தோடு எங்கள் கனவு முடிந்துவிடாது" என்றார்.
இனி ஹாக்கியை மறக்கமாட்டார்கள்
இன்றைய போட்டியில் கோல் அடித்த ரூபேந்திர் சிங் பால்," இந்திய மக்கள் ஒரு காலத்தில் ஹாக்கியை நேசித்தார்கள், ஆனால் நாங்கள் வெற்றி பெறவேயில்லை என்றவுடன் தற்போது ஹாக்கியை மறந்துவிட்டார்கள்.
நாங்கள் இப்போது வெற்றி பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் எங்கள் மிக நிறைய எதிர்பார்ப்பு இருக்கும், எங்கள் மீது மீதான நம்பிக்கையை என்றும் கைவிடாதீர்கள்" என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.