டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் மகளிர் ஹாக்கியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் இன்று (ஆக.4) மோதின. இப்போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே குர்ஜித் கவுர் கோல் அடித்து இந்தியாவிற்கு முன்னிலையை பெற்றுத் தந்தார். ஆனால், பல முறை இந்திய அணி வீராங்கனைகள் ஃபவுல்களை செய்துகொண்டிருக்க அர்ஜென்டினா பல பெனால்டி வாய்ப்புகளை பெற்றது.
பெனால்டியால் பறிபோன வெற்றி
இதேபோல் 18ஆவது நிமிடத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பை அர்ஜென்டினா வீராங்கனை பாரியன்யூவோ கோலாக மாற்றி ஆட்டத்தை சமநிலையாக்கினார். இதன்பின்னர், 36ஆவது நிமிடம் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பிலும் பாரியன்யூவோ கோலடித்து அர்ஜென்டினா அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதன்பின்னர், இந்திய அணியால் கோல் அடிக்கவே இயலவில்லை. கிடைத்த ஒரு சில பெனால்டி வாய்ப்புகளையும் தவறவிட்ட இந்திய அணி, இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்தது.
அடுத்த போட்டி
மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியை வரும் வெள்ளிக்கிழமை (ஆக.6) அன்று சந்திக்கிறது.
இதையும் படிங்க: Gold or Silver: இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் உறுதி; மிரட்டும் ரவிக்குமார்