ஹரித்வார் (உத்தரகாண்ட்): ஹரித்வார் மாவட்டம் ரோஷ்னாபாத்தில் இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் குடும்பம் வசித்து வருகிறது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நேற்று (ஆக.4) நடைபெற்ற மகளிர் ஹாக்கி அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ஒரு சிலர் வந்தனாவின் வீட்டின் அருகில் பட்டாசு வெடித்து இந்தியாவின் தோல்வியை கொண்டாடியுள்ளனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான வந்தனா கட்டாரியாவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என சாதி ரீதியாக இழிவுப்படுத்தி கூச்சலிட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, வந்தனாவின் சகோதரர் சந்திரசேகர் சிட்குல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இதில், சிலர் வந்தனாவின் வீட்டின்முன் பட்டாசு வெடித்து, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்டது காவல்துறையினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வந்தனா ஹாட்ரிக் கோல் அடித்து, இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்குத் தகுதிபெற பெரும் பங்காற்றியவர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: இது வெறும் ஆரம்பம்தான் - கேப்டன் மன்பிரீத் உறுதி