டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவிற்கான போட்டிகள் இன்று (ஜூலை 27) நடைபெற்றன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சார்பில் இளவேனில் வாலறிவன், தியாஷ்சிங் பன்வார் ஆகியோர் ஓர் அணியாகவும், அஞ்சும் மௌட்கில், தீபக் குமார் ஆகியோர் ஓர் அணியாகவும் பங்கேற்றனர்.
முதல் சுற்றிலேயே அவுட்
முதலாவது சுற்றில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், வாலறிவன் - பன்வார் இணை மொத்தம் 626.5 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தையும், அஞ்சும் மௌட்கில் - தீபக் குமார் இணை 18ஆவது இடத்தையும் பிடித்து அடுத்த சுற்றிற்கு தகுதிப்பெறமால் வெளியேறியுள்ளன.
பிஸ்டல் பிரிவும் ஏமாற்றம்
உலக அளவில் முதல் நிலை வீராங்கனையும், தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்டவருமான இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு அணி பிரிவு ஆகிய இரண்டிலும் முதல் சுற்றோடு வெளியேறி இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதேபோன்று, துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற இரு அணிகளில் மனு - சௌத்ரி இணை இரண்டாவது சுற்றிலும், யஷஸ்வினி சிங் - அபிஷேக் அணி முதலாவது சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாண்டியாவுக்கு கரோனா - தனிமைப்படுத்தப்பட்ட இந்திய அணி; டி20 போட்டி ஒத்திவைப்பு!