ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்விட்சர்லாந்த்தைச் சேர்ந்த பெலின்டா பென்சிக் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடி தனது கடும் உழைப்பின் பயனாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று (ஆக.01) நடைபெற்ற இறுதிச் சுற்றில் செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோன்ட்ரோசோவாவை 7-5, 2-6, 6-3 என்ற செட்களில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் பெலிண்டா
இன்று நடக்கும் மகளிர் இரட்டையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்திலும் பெலின்டா பென்சிக், சகநாட்டு வீராங்கனை விக்டோரிஜா கோல்பிக்குடன் இணைந்து, செக் குடியரசின் ரெஜ்சிகோவா, கேத்தரினா சினைகோவா ஜோடியை எதிர்கொள்கிறார்.
ஏற்கெனவே ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற பெலின்டாவுக்கு, இரட்டையர் பிரிவில் தங்கம் அல்லது வெள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது.
கொண்டாடப்பட வேண்டியவர் பெலின்டா
ஸ்விட்சர்லாந்தில் இருந்து தங்கம் வெல்லும் கனவுடன் ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட எத்தனையோ வீராங்கனைகள் தர வரிசையில் முதலிடம் பிடித்தும் தங்கம் வெல்லவில்லை. உலகத்தர வரிசையில் முதலிடத்தில் இருந்த மார்டினா ஹிங்கிஸ் இதற்கு நல்ல உதாரணம்.
ஆனால் தரவரிசையில் 12ஆவது இடத்தில் இருந்த பெலின்டா தங்கம் வென்றுள்ளது அந்த தேசத்தை நோக்கி அனைவரது கவனத்தையும் குவித்துள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெலின்டா
இது தொடர்பாக பேசிய பெலின்டா, ”ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை நான் சொந்தமாக்குவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. என் கரங்களில் ஒரு தங்கப் பதக்கம் மின்னப் போவது உறுதியாகிவிட்டது.
மற்றொரு பதக்கம் என்னவென இன்னும் முடிவாகவில்லை. இந்த தங்கப்பதக்கத்தை ரோஜர், மார்டினாவுக்கு அர்ப்பணிக்கிறேன்”என மகிழ்ச்சிப் பெருக்கில் பேசி முடித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடிய ஸ்விஸ் வீரர்கள் ரோஜர் பெடரர், வாவ்ரின்கா தங்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் வெளியேறினார் சதீஷ்