பெங்களூரு: டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள், தனியார் நிறுவனத்தினர், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நீரஜின் முதல் பயிற்சியாளர் காசிநாத் நாயக், 'நீரஜின் திறமை கடவுள் கொடுத்த பரிசு' என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, காசிநாத் நாயக் கூறுகையில், "நான் 2013-2019ஆம் ஆண்டுகளில் இந்திய ராணுவப் பயிற்சியாளராக பணிபுரிந்தேன். தற்போது ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியாளராக இருக்கிறேன்.
2015ஆம் ஆண்டு ராணுவப் பயிற்சியாளராக இருந்தபோது நீரஜ் சோப்ரா என்னிடம் பயிற்சி பெற்றார். அவர் ஓர் திறமைான விளையாட்டு வீரர். அவரது திறமை கடவுள் கொடுத்த பரிசு என்றே சொல்லலாம். பயிற்சியைத் தொடங்கிய ஓராண்டிலேயே, 2016ஆம் ஆண்டு போலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் ஈட்டி எறிந்து வெற்றி பெற்றார்.
அதைத்தொடர்ந்து, அவருக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் ஒருவரும் பயிற்சி அளித்தார். இதையடுத்து அவருக்கு ராணுவத்தில் இளநிலை ஆணையர் பதவி கிடைத்தது. 2018ஆம் ஆண்டு பயிற்சிக்காகப் பின்லாந்துக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பிய அவர், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் பயிற்சியாளராகப் பெருமிதம் கொள்கிறேன். நீரஜின் திறமை, அவருக்குக் கடவுள் கொடுத்த பரிசு" என்றார். மேலும், பயிற்சியாளர் காசிநாத் நாயக், 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: TOKYO OLYMPICS: நீரஜின் தங்கம்... இந்தியாவின் பத்தாவது தங்கம்!