டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரா துடுப்பு படகுப்போட்டியின் மகளிர் ஒற்றையர் 200 மீட்டர் பிரிவு காலிறுதிப்போட்டி இன்று (செப். 2) நடைபெற்றது. அதில், இந்தியா சார்பாக பிராச்சி யாதவ் பங்கேற்றார்.
இந்தியாவின் முதல் வீரர்
இப்போட்டி, கடந்த 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால், பாரா துடுப்பு படகுப்போட்டிகளில் பங்கேற்கும் முதல் வீரர் பிராச்சி யாதவ் என்பது கவனிக்கத்தக்கது.
காலிறுதிப்போட்டியில், ஒரு நிமிடம் 11:098 வினாடிகளில் இலக்கை கடந்து நான்காவது இடத்தை பிடித்து, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீராங்கனை எம்மா விக்ஸ் (Emma Wiggs) 58:084 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.
நீச்சல் டூ படகுப்போட்டி
26 வயதான பிராச்சி யாதவ், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் நகரத்தை சேர்ந்தவர். அவர், இரண்டு கால்கள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்.
முதலில், பாரா நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வந்த அவர், தனது பயிற்சியாளரின் அறிவுரைப்படி பாரா துடுப்பு படகுப்போட்டியை கையிலெடுத்துக்கொண்டார். அரையிறுதிப்போட்டி நாளை (செப். 3) நடைபெற இருக்கிறது.