டோக்கியோ: கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நாளையுடன் (ஆக.8) முடிவடைய உள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 127 வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.
டோக்கியாவில் சாதனை
இந்நிலையில், நடப்பு ஒலிம்பிக் தொடரில் மீராபாய் சானு, ரவிக்குமார் தாஹியா ஆகியோர் பெற்ற இரண்டு வெள்ளி; பி.வி.சிந்து, லவ்லினா, இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பஜ்ரங் புனியா ஆகியோர் பெற்ற நான்கு வெண்கலம், நீரஜ் சோப்ரா வென்றுள்ள தங்கம் என மொத்தம் ஏழு பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
இதுவே நவீன ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா ஒரு ஒலிம்பிக் தொடரில் பெறும் அதிகபட்ச பதக்கங்கள் ஆகும். இதற்கு முன் இந்தியா 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 6 பதக்கங்களை பெற்றிருந்தது.
லண்டனில் ஆறு
லண்டன் ஒலிம்பிக் தொடரில் விஜய் குமார் (துப்பாக்கிச்சுடுதல்), சுஷில் குமார் (மல்யுத்தம்) ஆகியோர் இரண்டு வெள்ளி பதக்கங்களையும், ககன் நரங் (துப்பாக்கிச்சுடுதல்), சாய்னா நேவால் (பேட்மிண்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) ஆகிய நான்கு பேர் வெண்கலப் பதக்கங்களை பெற்றிருந்தனர்.
நவீன ஒலிம்பிக்கில் இந்தியா...
இதையடுத்து, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மூன்று பதக்கங்களையும்; 1900 பாரிஸ், 1952 ஹெல்சின்கி, 2016 ரியோ ஆகிய ஒலிம்பிக் தொடர்களில் இரண்டு பதக்கங்களையும் இந்தியா பெற்றுள்ளது. 13 தொடர்களில் ஒரே ஒரு பதக்கத்தையும், 6 தொடர்களில் பதக்கம் எதையும் வென்றதில்லை.
நவீன ஒலிம்பிக் தொடர் 1896ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 1940, 1944ஆம் ஆண்டுகளான இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஒலிம்பிக் தொடர்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ஈட்டி தூக்கி நின்னான் பாரு.. இவன வெல்ல யாரு.... சரித்திர நாயகன் நீரஜ் சோப்ரா!