ஒலிம்பிக் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனுடன் போட்டியிட்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வியடைந்தது. பிரிட்டன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.
இருப்பினும், ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிவரை சென்ற இந்திய மகளிர் அணியை, பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே, ஹரியானா மாநில அரசு இந்திய ஹாக்கி மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த ஹரியானா வீராங்கனைகளுக்கு தலா ரூபாய் 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறுகையில், "ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள ஹரியானா வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு (ரூ. 1 கோடி) வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா