துபாயில் நடைபெற்றுவரும் துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில், நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா இணை, ரஷ்யாவின் குத்ரியவ்த்சேவா - கேட்ரினா இணையை எதிர்த்து விளையாடியது.
ஆரம்பம் முதலே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா இணை 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குத்ரியவ்த்சேவா இணை இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி சானியா இணைக்கு அதிர்ச்சியை அளித்தது.
இதனையடுத்து நடைபெற்ற மூன்றாவது செட்டுக்கான ஆட்டத்தில் இரு இணைகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. இருப்பினும், தனது அசத்தலான ஆட்டத்தினால் சானியா இணை மூன்றாவது செட்டை 10-8 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதன் மூலம் சானியா - கார்சியா இணை 6-4, 4-6, 10-8 என்ற புள்ளிக்கணக்கில் குத்ரியவ்த்சேவா இணையை வீழ்த்தி, துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்று அசத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கோலியை வீழ்த்தவே கிரிக்கெட் விளையாடுகிறேன் - டிரெண்ட் போல்ட்