ஏடிபி 1000 மாஸ்டர்ஸ் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 14ஆம் தேதி துபாயில் தோஹா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஓராண்டிற்கு பிறகு ரோஜர் ஃபெடரர் பங்கேற்கும் முதல் சர்வதேச டென்னிஸ் தொடராகவும் தோஹா ஓபன் அமையவுள்ளது.
இதையடுத்து, மியாமியில் நடைபெறவுள்ள ஏடிபி 1000 மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரிலிலும் ஃபெடரர் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், உடற்தகுதி காரணங்களுக்காக ஃபெடரர் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மாட்டார் என அவரது செய்தித் தொடர்பாளர் டோனி கோட்ஸிக் தெரிவித்துள்ளார்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஃபெடரர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த சீசனில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மியாமி ஓபனிலிருந்து ஃபெடரர் விலகியுள்ளது அவரது ரசிர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், கடந்தாண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டிக்கு பிறகு காயம் காரணமாக ரோஜர் ஃபெடரர் எந்தவொரு டென்னிஸ் தொடரிலும் பங்கேற்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 கோடி பாலோயர்களைக் கொண்ட முதல் இந்தியர் - கோலிக்கு மற்றொரு மகுடம்!