2019ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர், ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஃபெடரர், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதினார். ஆட்டத்தின் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர், 6-1 என்ற கணக்கில் அந்த செட்டை லாவகமாக கைப்பற்றினார். பின், ஆட்டத்தின் இரண்டாவது செட்டில், ஜான் இஸ்னர் சற்று கடுமையாக போராடினாலும், ஃபெடரரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.
இதனால், இரண்டாவது செட்டையும் ஃபெடரர் 6-4 என வென்றார். இதன் மூலம், ஃபெடரர் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜான் இஸ்னரை வீழ்த்தி நான்காவது முறையாக மியாமி ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இது ஃபெடரர் கைப்பற்றும் 101-வது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.