2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி 08ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மெல்போர்னில் நடைபெறும் என டென்னிஸ் வல்லுநர்கள் குழு (ஏடிபி) கடந்த டிச.18ஆம் தேதி அறிவித்தது.
உலகின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரமாக வலம்வருபவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர். இவர் தனது முழங்காலில் எற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
மேலும் காயம் காரணமாக இந்தாண்டின் டென்னிஸ் சீசனிலிருந்து விலகினார். இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மூலம் ஃபெடரர் மீண்டும் களத்திற்கு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அவரது காயம் இன்னும் குணமடையாததால், வரவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ஃபெடரர் விலக முடிவுசெய்துள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் டோனி கோட்ஸிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டோனி கோட்ஸிக், “தனது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ரோஜர் ஃபெடரர், வரவுள்ள ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலக முடிவுசெய்துள்ளார். இருப்பினும் தனது அணியுடன் கலந்தாலோசித்து, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்குப் பின் மீண்டும் களத்திற்கு வருவது குறித்து முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.
ஸ்விஸ் நாட்டின் நட்சத்திர வீரராக வலம்வரும் ரோஜர் பெடரர் இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’பாக்ஸிங் டே’ டெஸ்ட் : திணறும் ஆஸ்திரேலியா, வெற்றியை நோக்கி இந்தியா!