பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடாலை எதிர்கொண்டார்.
இதில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 13ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ரஃபேல் நடால் சர்வதேச டென்னிஸ் தொடரில் தனது 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி, டென்னிஸ் விளையாட்டில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற ரோஜர் ஃபெடரரின் (20) சாதனையையும் சமன் செய்தார்.
இந்நிலையில், ரஃபேல் நடால் வெற்றி குறித்து ரோஜர் ஃபெடரர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஒரு நபராகவும், ஒரு சாம்பியனாகவும் என் நண்பர் ரஃபேல் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். 20 கிராண்ட்ஸ்லாம் வென்றதற்காக நடாலை வாழ்த்துவது எனக்கு உண்மையிலேயே பெருமை. அவர் 13 முறை பிரெஞ்ச் ஓபனை வென்றது நம்ப முடியாத வகையிலான சாதனை. அவரது குழுவையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், தனியாக இந்த சாதனையை செய்ய முடியாது. இந்த 20ஆவது கிராண்ட்ஸ்லாம் வெற்றி என்பது எங்கள் இருவரின் பயணத்திலும் மேலும் ஒரு படியாக இருக்கும் என நம்புகிறேன். வெல்டன் ரஃபேல், நீ இதற்கு தகுதியானவன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரெஞ்ச் ஓபன்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் நடால்!