டென்னிஸ் விளையாட்டின் பிரபலமான தொடராகக் கருதப்படும் யூ.எஸ். ஓபன் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (செப்.11) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் முதல் செட்டை ஒசாகா 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெனிஃபர் இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இப்போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் அதிரடியாக விளையாடிய நவோமி ஒசாகா 6-3 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றி ஜெஃனிபர் பிராடிக்கு அதிர்ச்சியளித்தார்.
இதன் மூலம் யூ.எஸ். ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் நவோமி ஒசாகா 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நாளை மறுநாள் (செப்.13) நடைபெறவுள்ள யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முழுநீள மகளிர் ஐபிஎல் தொடர் நடந்தால், அது பெரும் சாதனை - ஜுலன் கோஸ்வாமி