2019-ஆம் ஆண்டுக்கான மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் ஃப்ளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் அனுபவமான சுவிஸ் நட்சத்திர வீரர் ஃபெடரரை எதிர்த்து 19 வயதேயாகும் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலவ் ஆடினார்.
ஆட்டம் தொடங்கியது முதலே அபாரமாக ஆடிய ஃபெடரர், முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். முதல் செட் ஆட்டம் 36 நிமிடங்கள்வரை நீடித்தது. பின்னர், தொடங்கிய இரண்டாம் செட் ஆட்டத்திலும் அதிரடி காட்டிய ஃபெடரர் 6-4 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் வரை நீடித்தது.
இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் ஏடிபி மாஸ்டர்ஸ் தொடரில் 50-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற சாதனையை ஃபெடரர் படைத்தார்.
இறுதிப் போட்டியில், ஃபெடரரை எதிர்த்து அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மோதவுள்ளார். மேலும், இதுவரை மூன்றுமுறை மியாமி ஓபன் டென்னிஸ் தொடரை வென்றுள்ள ஃபெடரர், தற்போது நான்காவது முறையாகக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.