இரண்டு ஆண்டுகளுக்கு பின் டென்னிஸ் விளையாட்டிற்குத் திரும்பிய சானியா மிர்சா, ஹோபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் ஆடி பட்டத்தைக் கைப்பற்றினார். இதனால் 2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பங்கேற்றுள்ளதால், பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக சானியா மிர்சா செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''நான் ஆடவேண்டிய டென்னிஸ் என்னிடம் இன்னும் உள்ளது என நினைத்ததால் மட்டுமே டென்னிஸ் விளையாட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளேன். ஆறு மாதத்திற்கு முன்னதாக டென்னிஸ் விளையாட்டிற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என நான் நினைக்கவேயில்லை.
நான் விளையாட்டிற்கு திரும்பியபோது முதல் போட்டி மட்டுமே எனக்கு சவாலாக இருந்தது. அதையடுத்து அனைத்து போட்டிகளிலும் சாதாரணமாகவே உணர்ந்தேன். முதல் போட்டி முடிந்த பின்தான் டென்னிஸ் மூலம் எனக்கு கிடைத்த உணர்வினை இத்தனை நாள்களாக மிஸ் செய்தேன் என்பது தெரிந்தது.
நான் ஹோபர்ட் இன்டர்நேஷனல் தொடரில் ஆடியபோது, வெல்ல வேண்டும் எனப் பங்கேற்கவில்லை. ஏனென்றால் நான் இரு வருடங்களுக்கு பிறகு திரும்பியுள்ளேன் என்பது தெரியும். அதனால் அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமலே பங்கேற்றேன். ஆனால் பட்டத்தைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒலிம்பிக் பதக்கங்களைத் தவிர அனைத்து வகையான போட்டிகளிலும் வெற்றிபெற்றுவிட்டேன். அதனையும் வெல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 4 மாதத்தில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி? வைரலாகும் சானியா மிர்சாவின் வீடியோ!