அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப்போட்டியில், செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ரஷ்ய வீரர் லூக்கா டேனில் மெட்வதேவை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் ரஷ்ய வீரரை வீழ்த்தினார். ஆனால் அடுத்த இரண்டு சுற்றுகளில் தடாலடியாக எழுந்த ரஷ்ய வீரர் மெட்வதேவ், யாரும் எதிர்பாராத வண்ணம் தொடர்ச்சியாக சர்வீஸ் புள்ளிகளைப் பெற்று ஜோகோவிச்சிற்கு பின்னடைவை ஏற்படுத்தினார். இதனால் அடுத்தடுத்த செட்களை 6-3, 6-3 என கைப்பற்றிய மெட்வதேவ், ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்.
இந்தத் தோல்வியால் நடப்பு சாம்பியனான ஜோகோவிச், தொடரிலிருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். ஏடிபி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிப்போட்டியில் முதல் செட்டை கைப்பற்றிய பின் ஜோகோவிச், போட்டியில் தோல்வியுறுவது 2013ஆம் ஆண்டுக்கு பின் இதுவே முதல் முறையாகும்.
டேனில் மெட்வதேவ், முன்னதாக வாஷிங்டன் ஓபன், ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ஆகிய தொடர்களின் இறுதிப் போட்டிவரை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.
மெட்வதேவ், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோஃபின்னை எதிர்கொள்கிறார். டேவிட் கோஃபின், நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரிச்சர்ட் காஸ்வொட்டை 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.