அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச்சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச், 53ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டாவை எதிர்கொண்டார்.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் ஜோக்கோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார். நடப்பு சாம்பியனான ஜோக்கோவிச் காலிறுதிப்போட்டியில் பிரான்ஸின் லூக்கய் போய்லேவை எதிர்கொள்கிறார்.
இதேபோன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர், இளம் ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ருப்லேவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட ரஷ்ய வீரர், பெடரரை 6-3, 6-4 என்ற நேர்செட்களில் வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சியளித்தார்.