2020ஆம் ஆண்டுக்கான ஏடிபி துபாய் ஓபன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் உலகின் முதல்நிலை வீரரும், செர்பியாவின் நட்சத்திர வீரருமான நோவாக் ஜோகோவிச், கிரீக் வீரர் சிட்சிபாஸுடன் மோதினார்.
2016ஆம் ஆண்டுக்கு பின் இந்தத் தொடரில் பங்கேற்ற ஜோகோவிச், இப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன்ஷிப் பட்டத்துடன் கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி ஐந்தாவது முறை துபாய் ஓபன் பட்டத்தை வென்றார்.
இதற்கு முன்னதாக இவர் (2009, 2010, 2011, 2013) ஆகிய ஆண்டுகளில் இந்தப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமின்றி அவர் வெல்லும் 79ஆவது ஏடிபி ஓபன் பட்டம் இதுவாகும். இதன்மூலம், ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிகமுறை ஏடிபி பட்டத்தை வென்ற வீரர்களின் வரிசையில் ஜோகோவிச் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 32 வயதான ஜோகோவிச் இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டென்னிஸ்க்கு 'குட்பை' சொன்ன மரியா ஷரபோவா!