சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால், சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த நிலையில், ருமேனியாவில் மருத்துவ உபகரணங்கள் வாங்க அரசாங்கத்திற்கு தான் பணம் வழங்கவுள்ளதாக அந்நாட்டு டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் தெரிவித்துள்ளார். இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், "இதுபோன்ற மோசமான நிலை ஏற்படும் என யாரும் நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள். நாம் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் இந்த தருணத்திலும் மருத்துவர்கள் தங்களது உயிர்களை பணயம் வைத்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவருகின்றனர்.
அவர்களது துணிச்சலை எண்ணி மிகவும் பெருமையாகவுள்ளது. என் நாட்டு மக்களை காப்பாற்றும் விதத்தில் நான் மருத்துவ உபகரணங்கள் வாங்க குறிப்பிட்ட தொகை வழங்கவுள்ளேன். இந்த சூழலில் நமது வாழ்க்கையிலும், நம்மை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்வாறு ஆதரவாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதை காட்டுவதற்கு இதுதான் சரியான வாய்ப்பு. எனவே அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம்" என குறிப்பிட்டிருந்தார். ருமேனியாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: செப். மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட பிரெஞ்சு ஓபன்!